Thursday, August 18, 2016

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 1
BY SP.VR.SUBBIAH










எல்லாம் வல்ல இறைவனை வணங்கிவிட்டு
இந்த ஜோதிடப் பகுதியைத் துவங்குகிறேன்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை
நம்பவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ
அல்லது நடுநிலையாக இருப்பவர்களைப் பிடித்து
இழுத்துவந்து நம்ப வைக்க வேண்டுமென்பதோ
என் நோக்கமல்ல!

யாரும், யாரையும் மாற்ற முடியாது!
அவர்களாகவே அறிந்து அலலது உணர்ந்து
மாறினால்தான் மாற்றம் ஏற்படும்!

நான் கற்றுணர்ந்தவைகள், யாருக்காவது பயன்படட்டும்
என்ற உயர்ந்த எண்ணத்தில் எழுதத்துவங்கிறேன்

ஜோதிடம் என்பது பெரிய கடல். அதை வாளியில்
பிடித்து நிரப்புவது போன்றதல்ல என் செயல்.
ஒரு அதிவேகப் படகில் உங்களை ஏற்றிக்கொண்டு
போய் கடலின் தன்மையை உங்களுக்குக் காட்சியாக
காட்டப்போகிறேன்.முத்துக்களையும், சுறாமீன்களையும்
காட்டப் போகிறேன்.

விருப்பம் உள்ளவர்கள் என்னுடன் வாருங்கள்.
மற்றவர்கள் வரவேண்டாம். கரையிலேயே
நின்றுவிடுங்கள். அது உங்களுக்கும் நல்லது
படகில் என்னுடன் பயணிப்பவர்களுக்கும் நல்லது!
----------------------------------------------------------------------
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,
ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்தபோது
என்னுடன் - எனக்கு மேலாளராக வேலைபார்த்த
நண்பர் ஒருவருக்கு ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானம்
உண்டு.

ஜோதிடம் தெரிந்தவரென்பதால், அவருக்கு அந்த
அலுவலகத்தில் ஒரு தனி மரியாதையும் இருந்தது
ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ள
மாட்டார்.எளிமையாக இருப்பார்.

அவ்ருக்குக் கீழே, அவருடைய நேர் உதவியாளனாக
அடியவன் பணி புரிந்ததால், அவருக்கும் எனக்கும்
தொடர்பு அதிகமாகி, அது நட்பாகவும் மலர்ந்து
பரிணமித்தது.

ஒரு நாள் திடீரென்று, அவரிடம் நான் சொன்னேன்
"ஸ்வாமி! எனக்கும் ஜோதிடம் கற்றுக் கொள்ள
ஆசையாக இருக்கிறது.அதற்கு நான் எனன
செய்ய வேண்டும்?"

(எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம்
அவரை நான் முதலில் சார்' என்று கூப்பிட்டவன்,
பிறகு மற்ற மேல் அதிகாரிகள் அவரைக் கூப்பிடுவது
போல ஸ்வாமி' என்றுதான் அழைக்க ஆரம்பித்தேன்.)

அவர் சிரித்துவிட்டு,"அது பெரிய மண்டைக்
குடைச்சலான வேலை! அதைத் தெரிந்து
கொண்டு என்ன செய்யப்போகிறாய்? தெரிந்து
கொண்டால் அது உன்னைப் பேயாகப் பிடித்துக்
கொண்டு விடும்.ஆகவே சும்மா இரு!"
என்று சொல்லி மறுத்து விட்டார்.

எதுவும் மறுக்கப்பட்டால் மனிதன் இரண்டு
மடங்கு ஆர்வமாகி விடுவானில்லையா?
நானும் அப்படி ஆர்வமாகி அவரை விடாமல்
நச்சரிக்க ஆரபித்தேன்.

என் நச்சரிப்புப் பொறுக்காமல் ஒருநாள் அவர்
என்னிடம் ஒரு பஞ்சாங்கத்தைக் கொடுத்து அதில்
உள்ள முக்கியமான த்கவல்களை மனப்பாடம்
செய்துவிட்டு வா என்று சொல்லி என்னை
ஓரங்கட்டி விட்டார்.

பஞ்சாங்கத்திலுள்ள விஷயங்களை மனனம்
செய்வதற்கு மூன்றுமாத காலமாவது ஆகும்,
அதுவரை இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாம்
என்று நினைத்தாரோ என்னவோ!

அனால் நான் விடாக் கொண்டனாக, அலுவலக
நேரம் போக மீதமிருந்த நேரங்களில் முழு முயற்சியுடன்
பதினைந்தே நாட்களில் மனனம் செய்து விட்டு,
திருவிளையாடலில் வரும் தருமி ஸ்டைலில்
அவரிடம் சென்று,"பஞ்சாங்கத்தைக் கரைத்துக்
குடித்துவிட்டு வந்திருக்கிறேன் - கேள்விகளை
நீங்கள் கேட்கலாம்" என்றேன்

அவர் சிக்கலான முறையில் பத்துக் கேள்விகள்
கேட்க நான் அத்தனை கேள்விகளுக்கும்
தயக்கமினறித் தடுமாற்றமின்றி பதில் உரைத்தவுடன்
அவர் அசந்துபோய் விட்டார்.

"அடப்பாவி, எப்படியடா, சாத்தியமாயிற்று என்றார்?"

"அதை விடுங்கள் அடுத்ததாக எதைப் படிக்கவேண்டும்?
என்றேன்.

அவர் அதற்கு உடனே சொன்னார்," உன் ஜாதகத்தைக்
கொண்டு வா, பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!"

"எதற்காக என்னுடைய ஜாதகம் தேவைப்படுகிறது -
நான் ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கும், அதற்கும்
என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்"

"ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு நல்ல புத்தியும்,
அதீத நினைவாற்றலும் வேண்டும். ஜாதகத்தில்
புதன் நன்றாக இருந்தால்தான் ஜோதிடம்
ம்ண்டையில் ஏறும். ஆக்வே கொண்டு வா!"
என்று சொன்னார்.

நான் என் சட்டைப்பையிலேயே அதை வைத்திருந்தேன்
எடுத்து நீட்டினேன்

வாங்கிப் பார்த்தவர் சொன்னார்,"உனக்கு ஜாதகத்தில்
புதன் ஏழில் அமர்ந்து வலுவாக உள்ளான். ஆகவே
உனக்கு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
இருக்கிறது. கற்றுக்கொள். ஆனால் அதை Hobby
ஆக மட்டுமே வைத்துக்கொள்"

நான் அந்த நேரம் வானத்தில் பறந்தது என்னவோ
உண்மை! அத்ற்குப் பிறகு ஜோதிடத்தைக் கற்றுக்
கொள்வத்ற்கு நான் பட்டபாடு இருக்கிறதே - அது
பெரும்பாடு. அதில் பல சுவார்சியமான விஷயங்களும்
உள்ளன

ஜோதிடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு
1.அடிப்படை ஜோதிடம் (Basic Astrology)
2.மேல் நிலை ஜோதிடப்பாட்ங்கள் (Advanced Study)

அடிப்படை ஜோதிடம் மிகவும் எளிதானது.
அனைவருக்கும் புரியும்படி இருக்கும்.
தெரிந்து கொள்வதும் எளிது

அடிப்படை ஜோதிடத்தைப் பற்றி ஐந்து அல்லது
ஆறு பதிவுகளில் உங்களுக்கு விளக்கிச்
சொல்லி விடுகிறேன்.

அதற்குப் பிறகு மேல்நிலை ஜோதிடத்தில்
படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்டு
விடுகிறேன். விருப்பப்படுபவர்கள் அவற்றை
வாங்கிப் படிக்கலாம்

பின் பதிவுகளில் ஜோதிட மேதைகளைப் பற்றியும்
அவர்கள் சொல்லி நடந்த பல சுவாரசியமான
விஷயங்களைப் பற்றியும் பதிவிட உள்ளேன்

மொத்ததில் பதிவின் சுவாரசியம் கெடாமல்
எழுதுவேன் என்று உங்கள் அனைவருக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன்

ஆகவே ஒரு பதிவையும் விட்டு விடாது தொடர்ந்து
படிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் உங்களுக்கு
ஒரு கன்டினியூட்டி கிடைக்கும்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன். மற்றவை நாளையப்பதிவில்

(தொடரும்)

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2


ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 2 

முன்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில் ஒரு
அன்பர் இப்படிக் கேட்டிருந்தார்.

///வானத்துல இருக்கிற கோள்கள், பூமில இருக்கற
அனைவர் மேலேயும் ஒரே விதமாகத்தானே
தாக்குது. அனைவருக்கும் ஒரே மாதிரியான
பலன்கள் தானே இருக்க முடியும். பின்ன எப்படி
வெவ்வேறு பிறந்த தேதியில் இருப்பவர்களுக்கு
வெவ்வேறான பலன்கள் ?///

பிறந்த நொடியில் உள்ள கிரகபலன்கள்தான்
Birth Chart என்னும் ஜாதகத்தை நிறைத்து
விடுகிறது. அதன்படிதான் ஆயுள் முழுக்க
பலன்கள் உண்டாகும். அது கர்ம பலன்
அல்லது பிறவிப் பலன் எனப்படும்

அதை அப்படியே வானில் உள்ள கோள்கள்
செயல் படுத்தும். அதைச் செயல் படுத்துவது
மட்டுமே கிரகங்களின் வேலை!
The planets have only executing power
what is stored in a horoscope

நான் பாலர் பாடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளேன்
அதாவது L.K.G & U.K.G அளவிற்கான பாடங்கள்
அன்பர் கேட்டிருக்கும் கேள்வி Advanced Study
களில் பாடம் நடத்தப் பெறும்போது கேட்கப்பட
வேண்டிய கேள்வி. அந்தப் பதிவுகளில் இதற்கு
விரிவான பதிலைச் சொல்கிறேன். இப்போது
சொன்னால் விளங்காது!

உங்களுக்குக் கார் ஓட்ட ஆசை என்றால்
முதலில் ஒருவர் உங்களுக்கு காரை மட்டும்தான்
ஓட்டச் சொலித்தர வேண்டும்.

பிறகுதான் காரில், பெட்ரொல் எப்படி இஞ்சினுக்குப்
போகிறது - அங்கே அது எப்படி carburetor
வழியாக இஞ்சினுக்குள் செலுத்தப் படுகிறது
இஞ்சின் எப்படி இயங்குகிறது. இஞ்சினிலிருந்து
இயங்கு சக்தி Gear Box வழியாக சக்கரங்க
ளுக்கு எப்படிப் போகிறது என்று சொல்லித்தர
வேண்டும். எல்லாவற்றிற்கும் முறை என்று
ஒன்று உண்டு.

ஆகவே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்
ஒரு பதிவைப் படிக்கும் பொழுது பதிவில் உள்ள
விஷயங்களில் சந்தேகம் உள்ளது என்றால்
மட்டுமே அந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டுக்
கேளுங்கள்.
வேறு ஏதாவது ச்ந்தேகம் என்றால்
என் மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள். என்
மின்னஞ்சல் முகவரி Profileலில் உள்ளது.
-----------------------------------------------------------------------------
உலகில் எவனும் எந்தக் கலையிலும் கொம்பன்
என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள
முடியாது. ஒவ்வொரு கலையும் அவ்வளவு பெரியது.
தன்னடக்கம் தேவை. அந்த தன்னடக்கத்தை நாம்
இசைஞானி இளையராஜா அவர்களிடம் காணலாம்

ஜோதிடத்திற்கும் அது பொருந்தும்.

அதனால்தான் ஜோதிட விஷய ஞானம் நிறைந்தவர்கள்
எளிமையாக இருப்பார்கள். அறைகுறை ஆசாமிகள்தான்
ஆட்டம் போடுவார்கள்.

அவர்கள் சொல்வதில் பாதி பலிதமின்றிப் போய்விடும்.
அந்த மாதிரிப் பேர்வழிகளால் ஜோதிடத்திற்கும் ஒரு
கெட்ட பெயர் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு ஜோதிடன் என்ன நடக்கும் என்று கோடிட்டுக்
காட்டலாமேயன்றி, இதுதான் நடக்கும் என்று
அறுதியிட்டோ அல்லது சவால்விட்டோ
சொல்லக்கூடாது

An astrologer can only indicate what will
take place and can not certainly say
what will definitely happen

ஜோதிடத்தின் முதல் விதி இதுதான்
---------------------------------------------------------------------------

மருத்துவத்தில் பல பிரிவுகள் உண்டு. பல
விற்பன்னர்கள் அததற்கென்று தனித்தனியாக
உள்ளார்கள். உதாரணத்திற்குப் பல் மருத்துவர்,
மகப்பேறு மருத்துவர், இருதயநோய் நிபுணர்,
கண் மருத்துவர், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்,
Open heart surgeon, General disease physician என்று
விதம்விதமாக உள்ளார்கள்.

அதுபோல, ஜோதிடத்திலும் பல பிரிவுகள் உண்டு.
படிப்பைப் பற்றிச் சொல்வது, திருமணப்பொருத்தம்
பார்ப்பது, தோல்விகள், விரையங்கள் (Losses)
முதலியவற்றைச் சொல்வது, தொழிலில்
ஏற்படக்கூடிய ஏற்றங்கள், மாற்றங்களைசொல்வது,
நோய், நொடிகளைக் கணித்துச் சொல்வது,
மரணத்தைப் பற்றிச் சொல்வது என்று பல பிரிவுகள்
உள்ளன.

ஒரு பிரிவில் உள்ள நியதிகளை, நுணுக்கங்களை
அதிகமாகப் படித்ததாலும், படித்து மனதில் ஏற்றி
வைத்ததாலும், அதே பிரிவில் ஆண்டாண்டு காலமாக
பலருடைய ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொன்ன
பட்டறிவுனாலும், ஒருவர் அந்தப் பிரிவில் மட்டுமே
மிகுந்த திறமைசாலியாக இருப்பார்.

General Physician' என்று மருத்துவத்துறையில்
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று
பொது மருத்துவம் செய்வதற்கு மருத்துவர்கள்
இருப்பதுபோல, பல ஜோதிடர்களுக்கு பொது
ஜோதிடம் மட்டுமே தெரியும்

ஒரு சிலர் மட்டும்தான் சகலகலா வல்லவர்களாக
இருப்பார்கள்.
(அது அவர்களுடைய ஜாதக அமைப்பு:-))))
-------------------------------------------------------------------------------------
என் கதைக்கு வருகிறேன்.

என் நண்பர் கொடுத்த அடிப்படை ஜோதிட நூலைப்
படித்துக் கொண்டிருக்கும்போதே, மேல் படிப்பிற்காக
பல ஜோதிட நூலகளைத்தேடி, வாங்கி சேகரிக்க
ஆரம்பித்தேன்.

அதுபோல practical testற்காக பல உறவினர்கள்
மற்றும் நண்பர்களின் ஜாதகங்களையும் கேட்டு வாங்கிச்
சேகரிக்க ஆரம்பித்தேன். அதெல்லாம் சுவையானது
ஜாதகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்
தர்ருங்கள் என்று சொல்லி நிறையப் பேர்களிடமும்,
மற்றும் பத்திரிக்கைகளில் வந்த பிரபலங்களின்
ஜாதகங்களையும் அடித்துப் பிடித்துச் சேகரிக்க
ஆரம்பிதேன்.

ஜோதிட நூலகளின் சொர்க்கம் மதுரை புது
மண்டபம்தான்.
அங்கே உள்ள பல கடைகளில்
பல நூல்கள் தேறின.

சுவாரசியமாக உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன்
அப்போதுதான், நான் நினைத்துப் பாராத சிக்க்ல்
ஒன்று ஏற்பட்டது.

நான் வாங்கிவைத்திருந்த புததகங்கள் அனைத்துமே
கடினமான செய்யுள் வடிவில் இருந்தன. பதம்
பரித்துப் படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சொற்களுக்கு
அர்த்தம் தெரிய தமிழ் அகராதியையும் வைத்துக்
கொள்ள வேண்டும். ஒரு கோளையே எதுகை
மோனை சந்தத்திற்காக பல பெயரில் சொல்வார்கள்
உதாரணத்திற்கு சனிக் கிரகம், நீலவன், என்றும்
முடவன் என்றும் சொல்லப்பட்டிருக்கும்

பொருள் எழுதப் பட்டிருந்தாலும் அது 19ம்
நூற்றாண்டுத் தமிழ். நமக்கெல்லாம் ஜெயகாந்தன்
பாலகுமாரன் எழுதும் தமிழ்தான் பழக்கமானது
சரிப்பட்டு வரக்கூடியது

தெருவில் நூறடிக்கு ஒரு Speed Breaker இருந்தால்
எப்படியிருக்குமோ அப்படி! வண்டி ஓட்டுபவன் எப்படி
ஓட்டுவான்?

அந்தக் காலத்தில் அந்த நூல்களில் பாண்டித்யம்
பெற்றவர்களெல்லாம் தந்தை மகன் வழியில் அலலது
குரு - சீடன் வழியில் கற்றிருப்பார்கள்
--------------------------------------------------------------------------------

உதாரணத்திற்கு ஒரே ஒரு செய்யுளைக் கொடுத்துள்ளேன்

"மந்தன்சேயிருவர்கூடி யிருந்திடதிடத்ததுந்தீது
அந்தெதிரிடமுமாக் தறுதியாகத்தீம்புண்டாகும்
உந்தவர்நாப்ன்குமூன்று மோரெட்டும்பத்துநோக்க
அந்தமாய்நினைப்பர்கண்டா யாறிருமாதந்தன்னில்"

- மணி கண்ட கேரள ஜோதிடம் என்னும் நூலில்
வரும் ஒரு பாடல்

(பொருள் - Saturn in association with Mars
in any house will confer only bad result.
In aspecting each other in the chart will
also confer only bad result)
------------------------------------------------------------------------------
திகைத்து நின்று விட்டேன்.

பஞ்சாங்கத்தை படிக்கவைத்த நண்பரிடமே
சென்றால், நான் "அன்றே சொன்னேனில்லையா?"
என்பார் என்ற நினைப்பில் அவரிடம் இதைச்
சொல்லாமல், வேறு ஒரு நண்பரிட்ம்
தற்செயலாகச் சொன்னேன்.

அவர் சொன்னார். இந்தத் தமிழ் புத்தகங்களை
யெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடு. எளிமையான
ஆங்கிலத்தில் ஏராளமான ஜோதிட நூல்கள் உள்ளன
தமிழில் ராசி அதிபதி, ராசி நாதன், ராசிக்குரியவன்
என்று விதம் விதமாகச் சொல்வதைப் போல இல்லாமல்
ஆங்கில நூல்களில் Owner என்ற ஒரு சொல்லை
மட்டுமே பயன் படுத்தியிருப்பார்கள். பாடலகளுக்கெல்லாம்
இடமேயில்லாமல் அனைத்தும் எளிமையான உரை
நடை வடிவில் (in text format) இருக்கும் என்றார்.

பிறகுதான் ஒரு ஒளி பிறந்தது. பல ஜோதிட நூல்களின்
ஆங்கிலப் பதிப்பை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்

படிப்பதற்கு செய்யுள் மொழி ஒரு தடையாக் இருக்கும்
போது ஆங்கிலத்தில் படிப்பதில் தவறில்லை என்று கருதி
ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தேன்

ஒரு வசதி என்னவென்றால், கேரளா, குஜராத், கர்நாடகா,
ஆந்திரம் போன்ற பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
பல ஜோதிடக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்கள்.
அவை அனைத்தும் ஆங்கில நூல்களில் மட்டுமே உள்ளன!

ஆனால் இன்றைய நிலைமை வேறு!

பல ஜோதிட நூல்கள் அழகு த்மிழில் மொழி பெயர்க்கப்
பெற்றுப் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன

என்னென்ன நூல்களைப் படிக்கலாம் என்பதைப்
பின் வரும் பதிவு ஒன்றில் பட்டியலாகத்
தருகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்

முதலில் பால பாடங்களைப் பார்ப்போம்

அடுத்த பதிவில் பஞ்சாங்கத்தில் தெரிந்து
கொள்ள வேண்டிவற்றை - உங்களைப்
பஞ்சாங்கத்தைத் தேடவைக்காமல் நானே
பதிவில் முக்கியமான விஷயங்களைத்
தொகுத்துத் தந்து விடுகிறேன்.

அதுபோல அடிப்படை ஜோதிடத்தில் உள்ள
பாடங்களையும் பதிவில் தந்து விடுகிறேன்

நீங்கள் print out எடுத்து வைத்துக் கொண்டு
அவற்றைப் படித்துப் புரிந்து கொண்டால்
மட்டும் போதும்.

(தொடரும்)
-------------------------------------------------

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 3

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 3



ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 3

நேரம்

என்னோட நேரம் சாமி, நான் என்ன செய்ய?' என்று
சொல்வோமே அந்த நேரத்தைப் பற்றியதல்ல
இந்தப் பதிவு

இது உண்மையிலேயே உள்ள நேரத்தைப் (Time)
பற்றிய பதிவு

நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்

சென்னையில் காலை மணி 10.00 என்று வைத்துக்
கொள்வோம். அதே நேரத்தில் சிங்கப்பூரில் என்ன
மணி என்று கேட்டால் சட்டெனப் பதில் சொல்ல
வராது.

அப்போது சிங்கப்பூரில் மணி 12.30 PM

நம் பதிவர்களைக் கேட்டால் கூகுள் ஆண்டவரிடம்
கேட்டுச் சொல்லி விடுவார்கள்.

சரி அறிவியல் பூர்வமாக எப்படி மாறுபடுகிறது
என்று (கூகுள் ஆண்டவரிடம் கேட்காமல்) சொல்லுங்கள்
என்றால் விஷயமறிந்த சிலர் மட்டுமே சொல்லக்
கூடும்

எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இப்போது
அதைச் சொல்கிறேன். பூமியின் அச்சரேகை/தீர்கரேகை
வைத்து அது கணக்கிடப் படுகிறது

பூமியின் வட்டம் 360 பாகை (degree)
நாள் ஒன்றிற்கு 24 மணி x 60 நிமிடம் = 1,440 நிமிடங்கள்
1,440 நிமிடங்கள் வகுத்தல் 360 பாகை = ஒரு பாகைக்கு
4 நிமிடங்கள்

லண்டன் மாநகரத்தில் இருந்துதான் இந்த
(அச்சரேகை/தீர்கரேகை) Time Zone கணக்கிடப் படுகிறது
It is called as Greenwich Mean Time (GMT)
------------------------------------------------------------------
Coordinated Universal Time (UTC).

Longitude at a point may be determined by calculating
the time difference Since there are 24 hours in a day
and 360 degrees in a circle, the sun moves across the
sky at a rate of 15 degrees per hour
(360°/24 hours = 15° per hour). So if the time zone a
person is in is three hours ahead of UTC then that
person is near 45° longitude (3 hours × 15° per hour = 45°).
-------------------------------------------------------------
Standard time zone Singapore UTC/GMT +8 hours
Standard time zone India UTC/GMT + 5.5 hours
------------------------------------------------------------
இந்தியன் Time Zone என்பது பொது!

இந்தியாவில் அனைவரும் அதன்படி
Indian Standard Time (IST) ஐ த்தான் பயன் படுத்துகிறோம்
ஆனால் ஜோதிடத்திற்கு உள்ளூர் நேரம் அவசியம்

உதாரணத்திற்கு
கல்கத்தாவின் தீர்க்கரேகை 88.24
மும்பையின் தீர்க்கரேகை 72.50
இரண்டு இடங்களுக்கும் உள்ள
வித்தியாசம் 16 பாகை x 4 நிமிடங்கள் = 64 நிமிடங்கள்

இந்தியாவின் நேரம் கான்பூரை மையமாக வைத்து
அமைக்கப்பெற்றுள்ளது. கான்பூரின் தீர்க்கரேகை 80.20
கான்பூரிலிருந்து கல்கத்தா + 8 பாகை
கான்பூரிலிருந்து மும்பை Minus 8 பாகை
அதனால் இரண்டு நகரங்களின் உள்ளூர் நேரம்
(Local Time) 30 நிமிடங்கள் வித்தியாசப்படும்

இந்திய நேரம் காலை 10.00 மணி என்றால் அதே
நொடியில்
கலகத்தாவின் உள்ளுர் நேரம் 10.30
மும்பையின் உள்ளூர் நேரம் 9.30 மட்டுமே
இதுபோல அனைத்து இந்திய நகரங்களிலும்,
கிராமங்களிலும் உள்ளுர் நேரம் மாறுபடும்
---------------------------------------------------------------------
ஜோதிடத்தின் அடிப்படை விதிகளில் இந்த நேரமும் ஒன்று
அதனால்தான் (அந்த நேர வித்தியாசத்தால்) ஒரே IST யில்
இரண்டு இடங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம்
வேறுபடும்.

அதற்கு உதாரண ஜாதகங்களைக் கணினியில் கணித்து
இந்தப் பதிவின் மேலே கொடுத்துள்ளேன் (In Screen Shot Format)
நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------
மருத்து மனைகளில் பிறந்த நேரத்தை இந்திய பொது
நேரத்தின்படிதான் (IST) எழுதி கொடுப்பர்கள்.

உள்ளூர் நேரத்தைப் பற்றி நாம் கவலைப் பட
வேண்டாம் ஜாதகம் எழுதும் ஜோதிடர் பார்த்துக்
கொள்வார்

அதுபோல கணினியும் தானகவே உள்ளூர் நேரத்திற்கு
மாற்றிக் கொண்டுதான் நம்முடைய ஜாதகத்தைக்
கணித்துக் காட்டும்
-----------------------------------------------------------------------------------
1. World time zone site: Click here for the link 
2. Time Zone Converter: Click here for the link
3. இந்திய நகரங்களுக்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை
களைத்தெரிந்து கொள்ள உதவும் இணைய தள முகவரி 

--------------------------------------------

(தொடரும்)

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 4

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 4

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 4
By. SP. VR. SUBBIAH
 

எங்கள் பகுதி மக்களெல்லாம் தமிழிலும், பக்தியிலும்
ஊறித் திளைத்தவர்கள்.

தமிழையும், சைவத்தையும் இரண்டு கண்களாகப்
போற்றுபவர்கள். பெயர்கள் எல்லாம் தூய தமிழ்ப்
பெயர்களாக இருக்கும்

சிறு வய்தில் இருந்தே வீட்டிலும் தமிழைச் சொல்லித்
தருவார்கள்.

வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள் எழுதும்போது
திருத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள்

க, கி, கீ, கோ, என்று எழுதும் போது (மேற்கோடுகளுக்கு
கொம்பு என்ற பெயர்) அவைகள் திருத்தமாக இல்லை
யென்றால் மறுபடி, மறுபடி எழுதச் சொல்லி
தண்டனை கிடைக்கும்

'கொம்பு சுழி கோணாமல், தம்பி நீ எழுதினால்தான்
சோறுண்டு'
 என்ற வரிகளைக் கவிதையாகச் சொல்லிப்
பசியில் தவிக்க வைத்து விடுவார்கள்

"பொழுதெப்ப விடியும்
பூவெப்ப மலரும்
சிவனெப்ப வருவார்
வரமெப்பத் தருவார்"
என்று பாட்ல்களையும் சொல்லிக்
கொடுப்பார்கள்.

"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகளைச் சொல்லும்"
போன்ற சினிமாப் பாடல்களெல்லாம் வீட்டிற்கு
வெளியேதான்.

சற்றுப் பெரிய குழந்தைகளுக்குக் கடிதங்கள்
எழுதச் சொல்லித் த்ருவார்கள். அதே சாக்கில்
அவர்களுடைய கடிதங்களுக்கும் dictation கொடுத்து
குழந்தைகளையே எழுதவைத்து விடுவார்கள்

காகிதத்தைக் கையில் எடுத்தவுடனேயே 'பிள்ளையார்
சுழி, சிவமயம் என்று எழுதிவிட வேண்டும். இல்லையென்றால்
பளார் என்று முதுகில் ஒன்று விழுந்துவிடும்

அதேபோல கடிதத்தை முடிக்கும்போது,
வேணும், அண்ணாமலையார் துணை என்று
எழுதித்தான் முடிக்கவேண்டும்.

அன்புள்ள மான்விழியே அல்லது அன்புள்ள மன்னவனே,
அன்புள்ள நண்பனே
 என்றெல்லாம் கடிதம் எழுதும்
வழக்கம் உலகத்தில் உள்ளது என்பது எனக்குப் பதினான்கு
வயதிற்குமேல்தான் தெரிந்தது.

அண்ணாமலை என்பது திருவண்ணமலையில் உறையும்
அண்ணாமலையாரைக் குறிக்கும்

“பிறந்தால் சிதம்பரத்தில் பிறக்க வேண்டும்,
வாழ்ந்தால் ஆருரில் வாழவேண்டும்,
இறந்தால் காசியில் இறக்கவேண்டும்.
இவை மூன்றிற்கும் சாத்தியமில்லை என்பதால்
அண்ணாமலையாரை நினைக்க வேண்டும்”
 என்பார்கள்.

சற்று வயதானவுடன், என் பெரியப்பாவிடம் எதற்கு
இது என்றபோது "அண்ணாமலையை நினைதாலே முக்தி !
ஆகவே பேசாமல் எழுது!" என்று சொல்லி என்
வாயை அடைத்துவிட்டார்.

ஓகோ அவருக்கு முக்தி கிடைக்க அடுத்தவன்தான்
எழுத வேண்டுமா என்று அறிவீனமாய் நினைக்காமல்
நல்லதுக்குத்தான் சொல்கிறார் என்று அப்போது நினைப்பேன்

இப்போது உலகம், ஜெட் விமான வேகத்தில் போய்க்
கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரமில்லை!
இந்தப் பழங்கதைகளையெல்லாம் சொன்னால்
அடிக்க வருவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்
பகிரங்கமாகப் பக்தியைப் பற்றியும், முக்தியைப் பற்றியும்
பேசினால் கத்தியை காட்டுவார்கள்.

கடிதத்தில் தேதி எழுதும் பொது, விய ஆண்டு
மாசித் திங்கள் 13ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்றுதான்
எழுத வேண்டும். 25.02.2007 என்று எழுதவிட மாட்டார்கள்.

அதனால் எனக்குச் சிறுவயதிலேயே தமிழ் மாதங்களின்
பெயர்களும், வருடங்களின் பெயர்களும் சுத்தமாகத் தெரியும்.

(அப்பாடா, Subjectற்கு வந்து விட்டேன்)

"சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி. புரட்டாசி
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி"

என்று தமிழ் மாதங்களின் பெயர்களைக் கடகட
வென்று சொல்வேன்

அதே போல தமிழ் ஆண்டுகளின் பெயர்களும் தெரியும்

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி,
ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய,
பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண,
பார்த்திப, விய,

சர்வஜித், சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய,
ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விஹாரி,
சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசு,
பராபவ,

பிலவங்க, கீலக, செளமிய, சாதாரண, விரோதிகிருது,
பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராஷச, நள, பிங்கல, காளயுக்தி,
சித்தார்த்தி, ரெளத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி,
ரக்தாஷி, குரோதன, அக்ஷ்ய

அப்பாடா, 60 ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்களை ஒரே ஓட்டத்தில்
சொல்லிவிட்டேன்.

இந்த இரண்டும்தான் இன்றைய பாடம். பாடங்கள்
எப்போதும் மருந்தைப் போன்றது: மருந்தைத் தேனில்
குழைத்துக் கொடுப்பார்கள்.

ஜொதிடப் பாடங்கள் என்னும் மருந்தை, என் சொந்தக்
கதைகள் என்னும் தேனோடு கலந்து, இன்று
முக்கியமான செய்திகள் இரண்டை இன்று பாடமாக
நடத்திவிட்டேன்

ஒன்று மாத்ங்கள், மற்றொன்று வருடங்கள்.
இது கணினியுகம். இவற்றைத் தெரிந்துவைத்துக்
கொண்டால் போதும். மனனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை!

அடுதத பாடம் மொத்தமும் மருந்துதான்.
அதுவும் வைத்திருந்து அவ்வப்போது சாப்பிட வேண்டியது.
அதனால் தேன் கலக்காமல் அப்படியே தருவேன்
சாப்பிடும்போது தேவைப்பட்டால் நீங்கள் கலந்து கொள்ளலாம்:-)))


(தொடரும்)------------------------------------------------

மேலும் ஒரு ஜோதிடம் சம்பந்தமான இணையதள முகவரி:
Astro Data Bank என்னும் இணையதள முகவரி சுட்டி இங்கே உள்ளது

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 5

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 5

ஜோதிடம் - ஒரு பார்வை - பகுதி 5
By SP.VR.SUBBIAH

பஞ்சாங்கம் (Sub Title)



பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கங்ளைக் கொண்டது

அந்த ஐந்து அங்கங்கள்:

1.வாரம், 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம், 5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள
ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள
தூரத்தைச் சொல்வதுதான் திதி
(The ditance between Sun and Moon is called as Thithi)

விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம்
செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

1. சஷ்டி விரதம், ஏகாதேசி விரதம்

2. அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம்
விரும்புவது தசமித் திதி

3. திருமணம், பதிவுத் திருமணம், இடம் வாங்குவது
போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி,
நவமித் திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான்
குறிப்பிடுவார்கள். ஒருவன் சித்திரை மாதம் வளர்பிறை
அஷ்டமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து
அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்
அதே சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில்
தான் அவனுக்கு நினைவுச் சடங்களைச் செய்வார்கள்.
கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள்

இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள்
இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில்
பலவிதமாக உள்ளது


---------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள
27. நட்சத்திரங்கள்.

நட்சத்திரங்கள்.ந்ட்சத்திரங்கள் என்பது வானவெளியில்
கிலோமீட்டர் கல்லைப்போன்று உள்ளன.சந்திரன்
செல்லும் பதையில் இன்றைய தினம் எந்தக் கல்
உள்ள்தோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம்.

இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது
(23.30 Hours, 26.2.2007, Monday) சந்திரன் இருக்கும்
ந்ட்சத்திரம் மிருகசீரிஷம்.

நாளை திருவாதிரை நட்சத்திரம். தினமும் சந்திரனின்
சுழற்சியில் அல்லது ஓட்டத்தில் ஒவ்வொரு
நட்சத்திரமாக வந்து கொண்டேயிருக்கும்

27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை
முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும்
சந்திரனைவைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும்,
அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிற்ந்த
ராசியும் மாறும்.
(27 Stars - divide by 12 Rasis or signs = 2.25 days)

நட்சத்திரங்கள் விவரம்
---------------------------------------------------------------------
இந்த 27 நட்சத்திரங்களையும் மனனம் செய்தே
ஆகவேண்டும். இல்லையென்றால் பின்னல் வருகிற
பாடங்கள் பிடிபடாமல் போய்விடும் அபாயம் உண்டு!
------------------------------------------
திதியில் பாதி கரணம்
--------------------------------------------
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து
சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக்
குறிப்பது யோகம்
---------------------------------------------
திதி & யோகங்களினால் என்ன பயன் என்பது பின்
வரும் பாடங்களில் வரும். இப்போது அவசியமில்லை!
----------------------------------------------------------
மருந்தின் அளவு (Dose) அதிகமானால் மாணவர்கள்
விடுப்பில் போய்விடும் அபாயம் உண்டு.
அதனால் இன்றையப் பாடம் இவ்வளவுதான்
பஞ்சாங்கத்தின் அடுத்த பகுதி நாளை!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 6

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 6

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 6
By SP.VR.SUBBIAH



வானவெளியில் கோள்களின் சுழற்சியைப் படமாகக்
கொடுத்துள்ளேன்.இது நான் போட்ட படமல்ல!
அமெரிக்க விஞ்ஞானக் கழகத்தின் இணையதளம்
ஒன்றிலிருந்து எடுத்தேன்.

இந்த விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் சுமார் 200 ஆண்டு
களுக்குள்தான். சென்னையில் உள்ள கோளரங்கத்திலோ
அல்லது கல்கத்தாவில் உள்ள கோளரங்கத்திலோ
இதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி தினத்தில் இந்து'
நாளிதழிலும் அந்த மாதத்தின் கோள்கள் நிலைப் பாட்டை
கோளரங்கத்தில் வாங்கித் தங்கள் வாசகர்களுக்காக
வெளியிடுகிறார்கள்.

ஆனால் இது எதுவுமில்லாமல் நமது பஞ்சாங்கத்தில்
இந்த விவரங்கள் எல்லாம் உள்ளன.

கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் உஜ்ஜயினியில்
வாழந்த ஆர்யபட்டர் என்னும் வானசாஸ்திரம், மற்றும்
ஜோதிட சாஸ்திர வல்லுனரால் இவை எல்லாம்
துல்லியமாகக் கணிக்கப் பெற்று எழுதிவைக்கப்
பெற்றுள்ளது!

Telescope, satellite, computer என்று எந்தவித உபகரணங்களும்
இல்லாத அந்தக் காலத்தில் இவற்றையெல்லாம் அந்த
மனிதர் எப்படிக் கண்டுபிடித்தார் என்பது வியப்பான
விஷயம்.

அவருக்குப் பிறகு வந்த பிருகு முனிவர், பராசரர்,
வராகமிஹிரர், ஜெய்மானி போன்றவர்களும் பெரும்
தொண்டாற்றியிருக்கின்றார்கள்.

அவர்கள் காலத்திலும், பிறகு அவர்களுக்குப் பின்னால்
அவர்கள் வழி வந்த அவர்களுடைய சீடர்கள் காலத்திலும்
ஐந்து லெட்சத்திற்கும் மேற்பட்ட மனிதர்களின்
ஜாதகங்கள் வாங்கப் பெற்று, ஆராயப் பெற்று பல அரிய
குறிப்புக்களும், செய்திகளும். ஜோதிட விதிகளும் ஓலைச்
சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம்
நாலந்தா பலகலைக்கழகத்தில் இருந்தனவாம். பிற்காலத்தில்
ஏற்பட்ட படையெடுப்புக்களில் பாதி மட்டுமே காப்பாற்றப்
ப்ட்டனவாம். மீதி படையெடுத்தவர்களால் தீக்கிரையாககப்
பட்டனவாம். இது வரலாறு கூறும் உண்மை!

அந்தமுனிவர்களுக்கு தீர்க்க தரிசனம் இருந்திருக்கலாம்
அதானால்தான் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது.
Intuition (Power of understanding something immediately without
reasoning) சக்தி உள்ளவர்களாலும் அப்படிச் செய்யமுடியும்

சரி, அதெல்லாம் முக்கியமில்லை - ஒரு தகவலுக்காக
உங்களுக்குச் சொன்னேன்!

பாடத்திற்கு வருகிறேன்.

கோள்கள் வானவெளியில் ஒரு ஒழுங்கில் சுற்றி
வருகின்றன. அவற்றின் பெயர்களையும் அவைகள் ஒரு
சுற்றை முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தின்
அளவையும் கீழே கொடுத்துள்ளேன்

அதேபோல வானவெளி வட்டம் 12 பகுதிகளாகப்
பிரிக்கப் பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு
பெயரிடப் பெற்றுள்ளது. அதையும் கீழே கொடுத்துள்ளேன்

இவை அனைத்தும் வான சாஸ்திரத்தை அடிப்படையாகக்
கோண்டவை. நட்சத்திரங்களும், கோள்களும் எல்லையற்ற
அண்டத்தில் (Space) உள்ளவை. ஆகர்ஷண சக்தியின்
விதிகளுக்கு (Laws of Gravitation) உட்பட்டவை
-------------------------------------------------------------




-------------------------------------------------------------
இன்று நடத்திய பாடங்கள் அத்தனையும் அஸ்திவாரம்
போன்றது. அவை அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்
கொள்வது நல்லது.

இல்லையென்றால் அடுத்து வரும் பாடங்கள் புரியாது!
மறுபடியும் நாளை சந்திப்போம்
(தொடரும்)

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 7

இரண்டு பிரபலங்களின் ஜாதகங்கள்

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 7
By SP.VR.SUBBIAH

முன் பதிவில் கோள்களின் பெயர்களையும், 12 ராசிகளின்
பெயர்களையும், அந்தப் பன்னிரெண்டு ராசிகளின் வழியே
கோள்கள் ஒருமுறை சுற்றி வருவதற்கு எடுத்துக்
கொள்ளும் காலத்தின் அளவையும் கொடுத்திருந்தேன்.

இன்றையப் பதிவில் அந்தக் கோள்களுக்கு ராசிகளுடன்
உள்ள தொடர்பையும், அவைகளுக்கு ராசிகளில் உள்ள
உரிமைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் முழு ஞானம் உள்ள ஒருவரிடம் ஒரு
மிகவும் பிரபலமான தலைவர் ஒருவரின் ஜாதகத்தைக்
( பெயரைச் சொல்லாமல்) காட்டி, இந்த ஜாதகம் எப்படி
யுள்ளது? என்று கேட்டால், அவர் அதைப் பரிசோதித்துப்
பார்த்து விட்டு இது ராஜ யோகம் உள்ள ஜாதகம்
இந்த ஜாதகர் நாட்டின் தலைமைப் பதவிவரைக்கும்
வரக்கூடியவர் என்று சொல்வார்!

அவர் எப்படிச் சொல்வார் என்றால், ஜாதகத்தில் அது
தெரியும்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள்
ஜாதகத்தில் உச்சம் பெற்றும், மற்றும் இரண்டு அல்லது
மூன்று கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருந்தால் அது
அந்த யோகத்தைக் கொடுக்கும்..

உதாரணத்திற்கு இரண்டு ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
ஒன்று தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி
அவர்களுடையது. மற்றொன்று இந்தியாவிலேயே அதிகம்
பார்வையிடப் பெற்ற முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா
காந்தி அவர்களுடையது.

கலைஞர் அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள்
வலுவாக உள்ளன. திருமதி காந்தி அவர்களுடைய
ஜாதகத்தில் 6 கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில்
உள்ளன. (Exchange of house with each other)

------------------------------------------------------------------------------------------------
பார்த்தவுடன் அந்த ஜோதிடருக்கு எப்படித் தெரிந்தது?
அவருக்கு மட்டுமல்ல ஜோதிட விதிகளைத் தெரிந்து
வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அது புலப்படும்

இன்றைய பாடத்தில், கோள்களுக்கு உரிய வீடுகளைப்
பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும்
போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும்
உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன்

நான் படிக்கும்போது, இப்படிக் கணினி, அட்டவணை தயாரிக்க
MS office software எல்லாம் கிடையாது.

எழுத்துவடிவில் ஓட்டமாக இருக்கும். படிப்பவர்கள்தான்
தங்கள் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ப பிரித்துப் படித்துக்
கொள்ள வேண்டும்! 

--------------------------------------------------------------






----------------------------------------------------------
இன்றைக்கு இவ்வளவு போதும்!
தொடர்ந்து ஏழு பதிவுகள் பதிந்து விட்டேன்.
நான்கு தினங்கள் வகுப்பிற்கு விடுமுறை.

நடத்தியுள்ள பாடங்களையெல்லாம் முடிந்தவரை (?)
மனனம் செய்துவையுங்கள்

மீண்டும் 5.3.2007 திங்கட்கிழமையன்று சந்திப்போம்

(தொடரும்)
--------------------------------------------------------

எனக்கு இன்னொரு வலைப்பதிவு இருக்கிறது
கண்மணிகளா! அதில் கவியரசரைப் பற்றிய
தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த
வகுப்பையும் கவனிக்க வேண்டாமா?
அந்த வகுப்பிற்கு தொடர்பு கொள்ள இங்கே சொடுக்கவும்!